அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவில் தனுஷ்கோடியில் மாரத்தான் போட்டி
ராமேஸ்வரம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் மாரத்தான் போட்டி நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 94வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று தனுஷ்கோடி அரிச்சல்முனையில் ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., மாரத்தான் போட்டி நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார். போட்டியில் மாணவர்கள், இளைஞர்கள் பலர் பங்கேற்றனர். முதலிடம் வென்றவருக்கு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ. 7000, 3ம் பரிசு ரூ.5000 வழங்கப்பட்டது. மேலும் 4ம் இடம் முதல் 10வது இடம் வரை வென்றவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீநிகம், ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீரா, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், அப்துல்கலாம் பேரன் சலீம், முதன்மை கல்வி அலுவலர்(பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், உட்பட பலர் பங்கேற்றனர்.