எம்.பி., நவாஸ்கனி கோர்ட்டில் ஆஜர்
ராமநாதபுரம்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசிய செயலாளராகவும், தமிழ்நாடு வக்ப் வாரியதலைவராகவும் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி உள்ளார். இவர் 2019 லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது கமுதியில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாத வாகனத்தில் பிரசாரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நவாஸ்கனி உட்பட ஏழு பேருக்கு எதிராக கமுதி போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி நிலவேஸ்வரன் முன் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. நவாஸ்கனி நேரில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை அளித்தார். விசாரணை டிச., 26க்கு ஒத்திவைக்கப்பட்டது.