ஏர்வாடி தர்காவில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
கீழக்கரை: ஏர்வாடியில் அல்குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் தர்கா புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபைக்கு ஏப்.,14ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் உயர்நீதிமன்ற ஆணையர் வழக்கறிஞர் எம்.அற்புதராஜ் மூலம் நடத்தப்பட்ட தேர்தலில் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர்.ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் தலைவராக அகமது இப்ராகிம், செயலாளராக சித்தீக், உதவித்தலைவராக முகம்மது சுல்தான் மற்றும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கிளையின் சார்பில் 18 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகளை முன்னாள் தலைவர் முகமது பாகிர் சுல்தான், முன்னாள் செயலாளர் செய்யது சிராஜுதீன் மற்றும் முன்னாள் உதவி தலைவர் சாதிக் பாட்ஷா, ராமநாதபுரம் மாவட்ட தலைமை காஜி சலாஹூத்தீன் ஆலிம் ஜமாலி ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.இவ்விழாவில் ஏர்வாடி ஊராட்சியில் உள்ள அனைத்து சமுதாய மக்களும், ஜமாத் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.