| ADDED : பிப் 19, 2024 10:44 PM
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து புவனேஸ்வர் அதிவிரைவு ரயில், செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில், திருச்சி முன்பதிவில்லா விரைவு ரயில், திருப்பதிக்கு மீனாட்சி விரைவு ரயில், சென்னைக்கு போர்ட்மெயில் விரைவு ரயில், கோவைக்கு வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.மதுரை விரைவு ரயில் காலை 6:48, 7:25, மதியம் 12:03, இரவு 7:03 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது. இவை தவிர ஓகா வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் கன்னியாகுமரிக்கு அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில்கள் இயக்கப்படும் கால அட்டவணை ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் தெளிவாக நேரம், இயக்கப்படும் நாள், மற்றும் ரயில் எண் ஆகியவை இடம் பெறவில்லை. இதனால் பயணிகள் ரயில் நிலைய பணியாளர்களை கேட்டு தான் தெரிய வேண்டிய நிலை உள்ளது.முன் பதிவு செய்ய வரும் பயணிகள் பலர் ரயில் எண் தெரியாமல் திணறுகின்றனர். இங்கு வைக்கப்பட்டுள்ள கால அட்டவணையில் பல முறை திருத்தம் செய்துள்ளனர். அது சரியாக தெரியாமல் பல இடங்களில் மாற்றம் செய்யப்பட்ட தகவல் முழுமையாக இடம் பெறாமல் உள்ளது.இதனால் ரயில் பயணிகள் தவிக்கின்றனர். ரயில்வே நிர்வாகத்தினர் ரயில் நிலையத்தில் தெளிவான கால அட்டவணை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பயணிகளின் தடுமாற்றத்தை போக்க வேண்டும். எதுவும் சரியில்ல...
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் போதுமான மின் விளக்குகள் இல்லாததால் பிளாட்பாரங்கள் இருளில் மூழ்கியுள்ளது. இங்குள்ள குடிநீர் பைப்களில் குடிநீர் வருவதில்லை. மேலும் ரயில் பெட்டிகள் நிறுத்தப்படும் இடம் குறித்த கோச் பொசிஷன் இண்டிகேட்டர் இதுவரை அமைக்கப்படவில்லை.இதனால் எந்த பெட்டி எங்கே நிற்கும் என தெரியாமல் முன்பதிவு செய்த பயணிகள் ரயில்வே போலீசார் மற்றும் பிற பயணிகளை தேடி அலைந்து கேட்பது பரிதாபமாக உள்ளது. இது தவிர இரண்டே பிளாட்பாரங்கள் உள்ள நிலையில் எக்ஸ்கலேட்டர் நடை பாலம் இல்லாததால் முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.------இப்படி ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஒன்னுமே உருப்படியா இல்ல. இதை எப்போது சரி செய்யும் ரயில்வே நிர்வாகம் என்பது தான் ஒட்டுமொத்த பயணிகளின் எதிர்பார்ப்பு.