பரமக்குடியில் பெயரளவில் அகற்றப்படும் ஆக்கிரமிப்பு
பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மணல் மட்டும் அகற்றப்படுவதால் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.பரமக்குடி ஓட்டப்பாலம் துவங்கி பாரதி நகர், ஐந்து முனை, ஆர்ச், பஸ் ஸ்டாண்ட், சந்தைப் பகுதி, வேந்தோணி விலக்கு ரோடு வரை இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் பொருட்களை வாங்க செல்லும் வாடிக்கையாளருக்கும் நிற்க இடமின்றி உள்ளது. இந்நிலையில் டூவீலர்கள் நிறுத்தி வைப்பதுடன், சரக்கு இறக்கும் வாகனங்களையும் நிறுத்த முடியாமல் உள்ளது. தொடர்ந்து நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.மேலும் நெடுஞ்சாலை ஓரங்களில் பள்ளிகள் செயல்படுவதால் மாணவர்கள் தினசரி ஆபத்தான பயணத்தில் உள்ளனர். நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த ஆண்டுகளில் ரூ.2 கோடியில் நடைமேடை அமைக்கப்பட்டும் ஆக்கிரமிப்பால் பலனின்றி இருக்கிறது. ஆகவே ஒட்டுமொத்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.