முத்துவயல் கிராமத்தில் உயிரி மருத்துவ சுத்திகரிப்பு அமைப்பதற்கு எதிர்ப்பு
பரமக்குடி : பரமக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் உயிரி மருத்துவ சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் கருத்து கேட்பு கூட்டம் பொதுமக்களின் எதிர்ப்பால் பாதியில் நிறைவடைந்தது. போகலுார் ஒன்றியம் முத்துவயல் கிராமத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் பொது உயிரி மருத்துவ சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்களிடம் நேற்று சத்திரக்குடியில் உள்ள மஹாலில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவணபெருமாள், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் திலீப் குமார், டாக்டர் அரவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் மக்களிடம் கருத்துகளை கேட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில் அதிகாரிகள் பாதியிலேயே மகாலில் இருந்து வெளியேறினர். இப்பகுதியில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் வரும் சூழலில் மண்ணிற்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மேலும் முறையான அறிவிப்பு இல்லாமல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆகவே மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தொடர்ந்து போராட்டத்தின் வாயிலாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்ப்பு தெரிவிப்போம் என அப்பகுதி கிராம மக்கள் கூறினர்.