| ADDED : மே 26, 2024 10:57 PM
திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை மழை காரணமாக மார்ச்சில் நெற்பயிர் அறுவடையின் போது வயல்வெளியில் சிதறிய நெல்மணிகள் தற்போது முளைத்து பயிராக வளர்ந்துள்ளன. இப்பயிர்கள் ஆடு, மாடு ஆகிய கால்நடைகளுக்கு தீவனமாகியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில், திருவாடானை உள்ளிட்ட இடங்களில் வடகிழக்கு பருவமழைகாலத்தில் 2023 அக்டோபர், நவம்பரம் மாதங்களில் நெல்சாகுபடி செய்தனர். இப்பகுதிகளில் மார்ச்சில் நெல் அறுவடை பணிகள் முடிந்தது. பெரும்பாலும் இயந்திரத்தை பயன்படுத்தி அறுவடை செய்யபடுவதால் நெல் சிதறல் அதிகமாக இருக்கும். வயல்களில் கிடக்கும் இந்த நெல்கள் சமீபத்தில் பெய்த கோடை மழையால் முளைக்க துவங்கியுள்ளது. மேய்ச்சல் மற்றும் தரிசு நிலங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. பசுந்தீவனங்கள் வளர்ந்துள்ளதால் கால்நடைகளும், உரிமையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து செங்கமடை விவசாயிகள் கூறுகையில், மார்ச், ஏப்ரல் காலக்கட்டத்தில் அதிக வெயில் காரணமாக பயிர்கள் வாடியும் காணப்பட்டது. ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் மிகவும் சிரமமாக இருந்தது. சுட்டெரித்த கோடை வெயிலால் புல், செடிகள் கருகின. நீர் நிலைகளும் வற்ற துவங்கியது. இந்நிலையில் மே மாத கோடை மழையால் வயல்களில் சிதறிய நெல்களால் முளைத்து பயிர்கள் வளர்ச்சியில் இருப்பதால் கால்நடைகளுக்கு தீவனமாகி உள்ளது என்றனர்.