பாம்பன் சாலை பாலத்திற்கு இன்று வயது 38 இன்று பிறந்தநாள்
ராமேஸ்வரம்: - இன்று (அக்., 2) பிறந்தநாள் காணும் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்திற்கு வயது 38 ஆகும். அக்காலத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பாம்பன் கடலில் படகு மூலம் வந்தனர். பின் ஆங்கிலேயர்கள் 1914ல் பாம்பன் கடலில் ரயில் பாலம் அமைத்து போக்குவரத்தை துவக்கினர். அன்று முதல் ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு ரயிலை மட்டுமே பக்தர்கள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பாம்பன் கடலில் 2.6 கி.மீ., க்கு தேசிய நெடுஞ்சாலை பாலம் அமைத்து 1988 அக்.,2ல் அப்போதைய பிரதமர் ராஜிவ் திறந்து வைத்தார். ராமேஸ்வரம் தீவு மக்களின் அடையாள சின்னமாக விளங்கும் பாம்பன் சாலை பாலம் இன்று 38ம் ஆண்டு பிறந்தநாள் விழா காணுகிறது. புயல், மழை, இயற்கை சீற்றத்தை கடந்து 37 ஆண்டுகளாக தாங்கிக் கொண்டு கம்பீரமாக நிற்கும் இந்த பாலம் சில ஆண்டுகளாக பலவீனமாகி வருகிறது. பாலம் நடுவில் உள்ள இரும்பு பிளேட்கள் சேதமடைந்து கனரக வாகனங்கள் சென்றால் பெரும் அதிர்வு ஏற்படுகிறது. இந்த பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் அமைக்க மத்திய அரசு 4 ஆண்டுக்கு முன் பாம்பன் கடலில் மண் பரிசோதனை, நிலஅளவை சர்வே எடுத்தது. ஆனால் இதுவரை திட்ட மதிப்பீடு, பணி துவக்குவது குறித்து மத்திய அரசு அறிவிக்காமல் மவுனம் காக்கிறது எந்த அறிவிப்பும் இல்லை.