பரமக்குடி: போக்குவரத்து தடையால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி : குறைந்த மாணவர்களுடன் செயல்பட்ட பள்ளிகள்
பரமக்குடி: பரமக்குடி பகுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். பசும்பொன் தேவர் குருபூஜையை ஒட்டி ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி வழியாக அனைத்து பஸ் போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டது. இதன்படி ராமநாதபுரம், சிவகங்கை வழியாக மதுரைக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் பரமக்குடி சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் மதுரை, பரமக்குடி நான்கு வழி சாலையிலிருந்து, நகருக்குள் நுழையும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து நகரிலும் ஆங்காங்கே போலீசார் பேரிகாடுகளை அமைத்து பொதுமக்கள் செல்ல முடியாதபடி செய்தனர். இதுகுறித்து வியாபாரிகளுக்கு முன்னெச்சரிக்கை விடப்படாததால் ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் வழக்கம் போல் திறக்கப்பட்டது. ஆனால் போலீசார் காலை முதலே கடைகளை அடைக்க கூறியதால் முற்றிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், உணவு பொருட்கள் வீணானதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்ட போதும் பல்வேறு பள்ளிகள் இயங்கிய நிலையில், குறைந்த அளவிலேயே மாணவர்கள் வருகை இருந்தது. ஒட்டுமொத்தமாக கூலித் தொழிலாளர்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. வரும் நாட்களில் போலீசார் தகுந்த பாதுகாப்பு அளிப்பதோடு உரிய வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வகுக்க வேண்டும், என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.