உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஸ்கேன்  ரிப்போர்ட் பெற பல நாட்கள் காத்திருந்து நோயாளிகள் அவதி: மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவலம்

ஸ்கேன்  ரிப்போர்ட் பெற பல நாட்கள் காத்திருந்து நோயாளிகள் அவதி: மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவலம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன், அல்டரா சவுண்ட் ஸ்கேன் என அனைத்தும் இருந்தும் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் மதுரையிலிருந்து வரும் டாக்டர்களிடம் அறிக்கை பெறுவதற்கு பலநாட்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினமும் 1000க்கு மேற்பட்ட வெளி நோயாளிகளும், 700 க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிறப்பு பிரிவுகளான எலும்பு முறிவு, தலைக்காய சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை பிரிவு, இதய பிரிவு, குழந்தைகள் சிறப்பு பிரிவு, மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு என பல்வேறு சிறப்பு பிரிவுகள் செயல்படுகிறது.நோயாளிகள் பாதிப்பு குறித்து ஸ்கேன் எடுக்க சிறப்பு பிரிவு டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினசரி 15 எம்.ஆர்.ஐ., ஸ்கேன், 200 சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மூன்று பிரிவுக்கும் சேர்த்து ஏழு டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 4 பேராவது பணியில் இருந்தால் சமாளிக்க முடியும். ஆனால் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியில் உள்ளார். இவர் அனைவருக்கும் ஸ்கேன் எடுத்துவிட்டு, அதற்கான ரிப்போர்ட்டும் அந்த ஒரு டாக்டர் மட்டுமே வழங்க வேண்டும். இதன் காரணமாக எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுப்பவர்களுக்கு ஒரு வாரம் கழித்தே அதற்கான ரிப்போர்ட் வழங்கப்படுகிறது.சி.டி.ஸ்கேன் எடுப்பவர்களுக்கு 2 நாட்கள் கழித்தே ரிப்போர்ட் வழங்கப்படுகிறது. நோயாளிகள் அவசரத்திற்கு ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்யப்படுகிறது. அதன் ரிப்போர்ட்டுகளை வைத்துத்தான் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை டாக்டர்கள் வழங்க முடியும். இதன் காரணமாக அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை செய்ய முடியாத நிலையில் சிரமப்படுகின்றனர். பலர் வெளியில் ஸ்கேன் எடுக்கும் நிலை உள்ளது. தமிழக அரசும், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து போதுமான டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை