விவசாயிகளுடன் சமாதான கூட்டம் ஒத்தி வைப்பு
கமுதி: கமுதி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுடன் நடைபெற்ற சமாதான கூட்டம் முடிவு பெறாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கமுதி தாலுகா பெருநாழி உள்வட்டப் பகுதியில் 2024--25ம் ஆண்டு மழை வெள்ளம் பாதிப்பிற்கு நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டிற்கு நிவாரணம், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து கமுதி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தாசில்தார் ஸ்ரீராம் தலைமை வகித்தார். காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயலாளர் மலைச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். அப்போது பேச்சுவார்த்தை கூட்டத்தின் போது இன்சூரன்ஸ் அலுவலர்கள் சரியான நேரத்திற்கு வரவில்லை. அதிகாரிகளும் முறையான பதில் தரவில்லை. எனவே சமாதான கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடன் விவசாயிகள், அதிகாரிகள் பலர் இருந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சமாதான கூட்டத்தில் அதிகாரிகள் முறையான தகவல் கொடுக்கவில்லை. இன்சூரன்ஸ் குறித்து பேசவில்லை. எனவே இனிவரும் நாட்களில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தேவையான இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.