கண்மாய்களில் மயில்கள் இறப்பு அதிகரிப்பு:தேவை நடவடிக்கை
திருவாடானை : திருவாடானை அஞ்சுகோட்டை கண்மாய்க்குள் மயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.திருவாடானை தாலுகா கண்மாய்களில் தேசிய பறவையான மயில்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கிறது. மயில்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் மர்மமான முறையில் மயில்கள் இறப்பு அதிகரித்து வருகிறது.திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கண்மாய்க்குள் ஒரு ஆண் மயில் இறந்து கிடந்தது. உடலில் காயங்கள் இருந்தன. செங்கமடை சுந்தரபாண்டி கூறியதாவது: திருவாடானை பகுதியில் உள்ள கண்மாய்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மயில்கள் வசிக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் நடமாட்டத்தையோ வாகனங்கள் சத்தம் கேட்டாலோ ஓடி ஒளிந்து கொள்ளும் மயில்கள் தற்போது மனிதர்களைக் கண்டு அச்சப்படுவதில்லை.மனிதர்கள் நடமாட்டத்தை பார்த்து பழகிய அவை, வெளியாட்கள் நடமாட்டத்தை கண்டால் மட்டும் ஓட்டம் பிடிக்கின்றன. அரிதாக காணப்பட்ட மயில்களை கோழிகள் போல் அதிகமாக பார்ப்பதால் வளர்ப்பு பிராணி போல் மாறியுள்ளன.வயல்களுக்கு சென்று உணவை தேடிய மயில்கள் தற்போது அறுவடை பணிகள் முடிந்து விட்டதால் கண்மாய்க்குள் தங்கி பசியை போக்குகின்றன. இந்நிலையில் கண்மாய்க்குள் மயில்கள் இறப்பது அதிகமாக உள்ளது. மயில்கள் வேட்டையாடப்படுகிறதா என்பதை மனதில் கொண்டு இறப்பிற்கான காரணத்தை வனத்துறை அலுவலர்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.