பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகாமில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் அகில பாரத ஹிந்து மகா சபா தலைவர் பால சுப்பிரமணியன் தலைமையில் 40 பேர் தனித்தனியாக பட்டா வழங்க கோரி மனு அளித்தனர். பாலசுப்பிரமணியம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ஊராட்சி அம்பேத்கர் நகரில் 30 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள். அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் பெரும்பாலானோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. சுமார் 40 வீடுகளுக்கு மட்டும் தற்போது வரை பட்டா வழங்கப்படவில்லை. எங்களுக்கான அடையாளம் அந்த கிராமம் தான். பட்டா இல்லாததால் எந்தவொரு சலுகையும் பெறமுடியவில்லை. இதற்கு முன்பு இருந்த கலெக்டர் அந்த பகுதியில் இருக்கலாம் எனக் கூறி இடம் அளந்து கொடுத்தார். இருந்தும் பட்டா வழங்கவில்லை. அதனால் ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் தனித்தனியாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் என்றனர். பணிக்கு வரவில்லை கமுதி தேர்வுநிலை பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள் அளித்த புகார் மனு, கமுதியில் 27 துாய்மைப் பணியாளர்கள் இருந்த நிலையில் தற்போது 19 பேர் மட்டும் உள்ளோம். அதில் 6 பேர் துாய்மைப் பணிக்கு வராமல் மாற்று பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் துாய்மைப் பணிகள் தேக்கமடைகிறது. எங்களுக்கு வேலைப்பளு அதிகமாகின்றன. கமுதி வாரச் சந்தைக்கு நியமிக்கப்பட்ட காவலாளியும் தனது பணியை விடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் பணியை செய்து வருகிறார். இதனால் வாரச்சந்தை மது அருந்தும் கூடமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளனர்.