பரமக்குடி ஆற்றுப்பாலத்தில் குழிகளால் தடுமாற்றம்: சீரமைக்க கோரிக்கை
பரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றுப் பாலத்தில் ஆங்காங்கே குழிகள் உருவாகியுள்ள நிலையில் மக்கள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.பரமக்குடியில் இருந்து வைகை ஆற்றின் மறுகரைக்கு செல்ல ஆற்றுப்பாலம் ஒன்று மட்டுமே உள்ளது.இந்தப் பாலம் பரமக்குடி பெரிய பஜார், இளையான்குடி ரோடு மற்றும் மறுகரையில் வைகைநகர், எமனேஸ்வரம் பகுதியுடன் இணைக்கிறது. இதன் வழியாக திருச்சி, சென்னை மற்றும் பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்ல பாலம் பிரதானமாக உள்ளது. மேலும் நகராட்சிக்கு உட்பட்ட வைகை நகர், புதுநகர், மஞ்சள்பட்டணம் என மூன்று வார்டுகளை சேர்ந்த மக்கள் இதன் வழியாகவே வந்து செல்ல வேண்டும். இந்நிலையில் பாலத்தில் ஆங்காங்கே குழிகள் உருவாகி அபாயமானதாக இருக்கிறது. தொடர்ந்து இரண்டு ஓரங்களிலும் மணல்மேடுகள் உருவாகி சைக்கிள் மற்றும் டூவீலரில் செல்வோர் தடுமாறும் நிலை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் நடந்து செல்லும் மக்கள் விபத்திற்குள்ளாகும் சூழல் அதிகரித்துள்ளது. ஆகவே பாலத்தில் உள்ள குழிகளை சீரமைப்பதுடன் மணல்மேடுகளை அகற்ற வேண்டும். மேலும் ஒட்டுமொத்தமாக பாலத்தின் மீது புதிய ரோடு அமைத்து எளிமையான பயணத்திற்கு நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.