கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கிரிக்கெட் அசோஷியேஷன் சார்பில், லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. ராமநாதபுரம் தனியார் மகாலில் நடந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கிரிக்கெட் அசோஷியேஷன் துணைத்தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். கிரிக்கெட் சங்க செயலாளர் மாரீஸ்வரன் வரவேற்றார். புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் அசோஷியேஷன் செயலாளர் கனகராஜ், சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சதீஸ், முன்னாள் நிர்வாகி வெங்கடாச்சலம் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினார். தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியேஷன் துணைத்தலைவர் பாபா சிறப்புரையாற்றினார். 2023ல் முதல் பிரிவில் அக்னி கிரிக்கெட் கிளப் முதலிடமும், 2ம் இடத்தினை ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி பெற்றது. 2வது பிரிவில் நேதாஜி கிரிக்கெட் கிளப் அணி முதலிடமும், சுந்தரம் மெமோரியல் கிரிக்கெட் கிளப் 2ம் இடத்தை பெற்றது. 2024 ம் ஆண்டுக்கான போட்டியில் முதல் பிரிவில் ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி முதலிடமும், கிரான்ட்சலாம் கிரிக்கெட் கிளப் அணி 2ம் இடம் பெற்றது. இரண்டாவது பிரிவில் நியூ இளம்புயல் கிரிக்கெட் கிளப் அணி முதலிடமும், ரெயின்போ கே.டி.கே.எம் கிரிக்கெட் கிளப் அணி 2ம் இடமும் பெற்றது. வென்ற அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள், கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.