வரத்து கால்வாயில் புதர் மண்டியதால் வயலுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்
கமுதி: கமுதி அருகே பேரையூர் பெரிய கண்மாயிலிருந்து எஸ்.பி.கோட்டை கண்மாய்க்கு செல்லும் வரத்துக்கால்வாயில் கழிவுநீர் தேங்கி நாணல் செடிகள் வளர்ந்து புதர்மண்டி இருப்பதால் விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு விவசாயத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். கமுதி அருகே பேரையூர் பெரிய கண்மாயில் இருந்து எஸ்.பி.கோட்டை, இலந்தைகுளம் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக வரத்துக்கால்வாய் வசதி உள்ளது.இங்கு பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் பேரையூர் அரசு கால்நடை மருத்துவமனை அருகே செல்லும் வரத்துக்கால்வாயில் கழிவுநீர் தேங்கி நாணல்செடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இதனால் பருவமழை காலத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வரத்து கால்வாய் சுருங்கியும் துார்வாரப்படாமல் உள்ளது. எனவே இந்த கோடை காலத்தை கருத்தில் கொண்டு விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக நாணல் செடிகளை அகற்றி துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.