துாய்மை காவலருக்கு ஊராட்சி நிதியில் சம்பளம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் துாய்மைக் காவலர்களுக்கு ஊராட்சி நிதியிலிருந்து சம்பளம் வழங்கக் கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் சிவாஜி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் சந்தானம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் குருவேல், உள்ளாட்சி மாவட்டச் செயலாளர் அய்யாத்துரை பங்கேற்றனர். ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் பங்கேற்றனர். குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி மேல் நிலை குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.14,593, துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்களுக்கு ரூ.12,593 வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி தொட்டி ஒன்றை சுத்தம் செய்ய ரூ.300 வழங்க வேண்டும். துாய்மை காவலர்களுக்கு ஊராட்சி நிதியிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.