உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடகு வைத்த வீட்டு பத்திரம் தர மறுப்பு; ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

அடகு வைத்த வீட்டு பத்திரம் தர மறுப்பு; ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து ஓராண்டுக்கும் மேல் தராமல் இழுத்தடித்த வங்கி பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அரசு மேல்நிலைப் பள்ளி தெருவில் வசித்து வருபவர் தங்கசாமி 69. இவரது நிலத்தில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட வீட்டை தனது மகன் கண்ணனுக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் கண்ணன் வீட்டின் பத்திரத்தை உச்சிப்புளியில் உள்ள ராமநாதபுர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை அலுவலகத்தில் ரூ.9 லட்சத்திற்கு அடகு வைத்துள்ளார். வட்டியுடன் ரூ.12 லட்சம் செலுத்தி பத்திரத்தை மீட்டுள்ளார். அதன் பின் மீண்டும் பத்திரத்தை அடகு வைத்து ரூ.10 லட்சம் பெற்றுள்ளனர். திரும்ப ரூ.13 லட்சம் வட்டியுடன் செலுத்தினால் தான் பத்திரம் வழங்கப்படும் என வங்கித்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை செலுத்த தயாராக இருந்தும் ஓராண்டுக்கும் மேலாக பத்திரத்தை தர மறுப்பதாக ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியன் சம்பந்தப்பட்ட வங்கி பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, வழக்கு செலவுக்காக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப் பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !