ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சிறு, குறு பாலங்கள் சீரமைப்பு! மழையில் ரோடு சேதம், நீர் தேங்குவது தடுக்கப்படும்
ராமநாதபுரம்; ராமநாதபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் மழை பெய்தால் நீர் தேங்கும் சேதமடைந்த ரோடுகள் மற்றும் சிறு, குறு, தரைப்பாலங்களை கண்டறிந்து சீரமைக்கும் பணி மற்றும் காய்ந்த மரங்கள்மரக்கிளைகள் அகற்றும் பணி நடக்கிறது. ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்டம் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் மாநிலச்சாலை, மாவட்டச்சாலை, கிராமச்சாலைகள் என 1800 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்படுகிறது. இவ்வழியில் 3000 சிறு, குறு தரைப்பாலங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தில் நீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்கி விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் செப்., அல்லது அக்., வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. தற்போது மழை பெய்து வருவதாலும் நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டத்திற்கு உட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கமுதி, முதுகுளத்துார் இடங்களில் சாலை சேதமடைந்தும், சிறு,குறு, தரைப்பாலம் துாம்புகள் மண்மேவியுள்ள இடங்களை கண்டறிந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முருகன் மேற்பார்வையில் ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம் சாலை, மதுரை சாலை, கமுதி, முதுகுளத்துார், பார்த்திபனுார் உள்ளிட்ட நகர், புறநகர் கிராமங்களில் சேதமடைந்துள்ள சாலைகளில் பேட்ஜ் ஓர்க் நடக்கிறது. நீர் செல்ல முடியாத வகையில் மண்மேவியுள்ள, புதர்மண்டிய சிறு,குறு, பாலங்களை சுத்தம் செய்து புதிதாக வர்ணம் பூசும் பணிகள் நடக்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாக இருபுறமும் வளர்ந்துள்ள மரக்கிளைகள் மற்றும் காய்ந்த மரங்களை மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் முழுமையாக அகற்றும் பணிகள் நடக்கிறது. இதே போன்று மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக் கட்டுப்பாட்டில் சேதமடைந்துள்ள சாலைகள், சிறு, குறு தரைப்பாலங்களை சீரமைக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள், மக்கள் வலியுறுத்தினர்.