வலையில் சிக்கிய ஆமை மீட்பு
தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய ஆமை உயிருடன் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டது. தொண்டி அருகே சோலியக்குடியை சேர்ந்தவர் ராமுகண்ணு. இவரதுவிசைப்படகில் அதே கிராமத்தை சேர்ந்த சிவபாலன், சிங்கார செல்வம், மனோகரன், ஜெய்கணேஷ் ஆகிய மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 60 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை சிக்கியது.வலையில் இருந்து விடுவிக்க முடியாமல் மீனவர்கள் திணறினர். வலையுடன் படகில் ஆமையை துாக்கிப் போட்டு வலையை அறுத்து ஆமையை உயிருடன் விடுவித்து கடலில் விட்டனர். மீனவர்கள் கூறுகையில், தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருவது வழக்கம். வலையில் சிக்கிய ஆமையை மீட்க பெரும் சிரமம் அடைந்தோம். வலை அறுத்துவிட்டதால் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது என்றனர்.