தொடர் மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தம் ; தொழிலாளர்கள் தவிப்பு: ; வாழ்வாதாரத்திற்கு அரசு உதவக் கோரிக்கை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் உப்பளங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள 7000 தொழிலாளர் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி அக்., முதல் பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நேரங்களில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாப்பான இடங்களில் பாக்கெட் போடும் பணி வழங்கப்படும். கன மழையால் தற்போது உப்பு பாக்கெட் போடும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. வாலி நோக்கம் அரசு உப்பு நிறுவன் உள்ளிட்ட தனியார் உப்பளங்களில் 7000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் உப்பு உற்பத்தி தொழில் மட்டுமே. வேறு தொழில்கள் தெரியாத நிலையில் உப்பளங்களில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பருவ மழைக்காலங்களில் பாக்கெட் போடும் பணிகள் வழங்கப்படும்.தற்போது கனமழை பெய்வதால் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு கரைந்து செல்லும் நிலை இருப்பதால் இந்த பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. உப்பள தொழிலாளர்களுக்கு நுாறு நாள் வேலையும் வழங்கப்படுவதில்லை. அரசு உப்பு நிறுவனத்தில் பணிபுரிபவர்களை தொழிலாளர்கள் நல வாரியத்திலும் பதிவு செய்வதில்லை. இதனால் மழைக்கால நிவாரண தொகையும் வழங்கப்படுவதில்லை. இதனால் 7000 தொழிலாளர் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். எனவே மழைக்கால நிவாரணத்தொகை தமிழக அரசு வழங்க வேண்டும்.