சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளால் அவதி
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டிற்குள் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்துார், அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்கின்றன. சாயல்குடி மற்றும் கடலாடி சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களும் இங்கு வருகின்றன.இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை காட்டிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவு பெருகி வருகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் பரப்பளவு சுருங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இட நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய வழிகாட்டுதலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சாயல்குடியை சேர்ந்த எம்.பெத்தராஜ் கூறியதாவது:சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. அச்சமயத்தில் பள்ளி மாணவர்கள், மூதாட்டிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் பஸ் ஸ்டாண்ட் வழியாக கடந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் இடங்களில் அதிகளவு ஆக்கிரமிப்பு உள்ளது.அரசு பஸ்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோக்களுக்கு வேறு இடம் மாற்றி கொடுத்து பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்யவும், அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு உரிய இட வசதியை உருவாக்கித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் பல்வேறு விபத்துக்கள் இப்பகுதியில் ஏற்படுகின்றன. இது குறித்து சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளேன் என்றார்.