பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு வீடியோ கான்பிரன்சிங்கில் சாட்சிகள் விசாரணை
ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கின் சாட்சிகளான டாக்டர்கள் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.பரமக்குடியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நகராட்சி முன்னாள் அ.தி.மு.க., 3 வது வார்டு கவுனசிலரும், நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கர்களாக செயல்பட்ட அன்னலட்மி உமா, கயல்விழி ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் சிகாமணிக்கு ஜாமின் வழங்கியது. ஜாமினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு தாக்கல் செய்தனர். ஜாமின் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சிகாமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கில் சிகாமணிக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்து வழக்கை ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றி 5 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சுதாகர் விசாரிக்கிறார்.நேற்று விசாரணையில் ராமநாதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர் சொரூபராணி, மற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர் முகமது அமீர் கான் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி நீதிபதி சுதாகர் முன்னிலையில் சாட்சியம் அளித்தனர். மொத்தம் 45 சாட்சிகளில் இதுவரை 26 பேர் சாட்சியம் அளித்துனர்.