பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை; சாலையோரங்களில் குவியும் குப்பை
பெரியபட்டினம் : பெரியபட்டினம் ஊராட்சியில் பெயரளவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுவதால் தெருக்களில் குப்பை குவிந்துள்ளதால் துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். பெரியபட்டினத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பெரியபட்டினம் பிரதான சாலைகளில் மும்முனை சந்திப்புகளில் அதிகளவு குப்பையை கொட்டும் போக்கு தொடர்கிறது. உடனுக்குடன் குப்பை அள்ளப்படாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி சார்பில் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கென தனியாக டிராக்டர், குப்பை வண்டிகள் உள்ளன. இவை பெயரளவில் பயன்படுத்தப்படுகின்றன. பல நாட்களாக குப்பை தேங்கி உள்ளதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது. குப்பையின் மீது இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் நாய் உள்ளிட்டவைகளின் தொந்தரவு அதிகளவு உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய முறையில் குப்பையை அகற்றி துாய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.