வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: வி.ஏ.ஓ.,க்களுக்கு வேலைப்பளு
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களுக்கு பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்வதற்கு நவ., 15 கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு வி.ஏ.ஓ., வழங்கும் நெற்பயிருக்கான அடங்கல் சான்று முக்கிய ஆவணம். இதனால், அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் வி.ஏ.ஓ.,க்களிடம் அடங்கல் சான்று பெற்று இன்சூரன்ஸ் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர் பதிவு சிறப்பு தீவிர திருத்தம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வி.ஏ.ஓ.,க்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் விவசாயிகளுக்கு சாகுபடி அடங்கல் வழங்கி வரும் நிலையில், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் படிவம் வழங்கும் பணியில் வி.ஏ.ஓ.,க்கள் ஈடுபடுவதால் கடும் வேலைப் பளுவுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அலுவலர்களின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்சூரன்ஸ் பதிவுக்கான கடைசி நாளான நவ.,15க்கு மேல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் வி.ஏ.ஓ.,க்களை ஈடுபடுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்கள் வலியுறுத்தினர்.