உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து பணி மனைக்குள் புகுந்த புள்ளி மான் வறட்சியால் விலங்குகள் தவிப்பு

ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து பணி மனைக்குள் புகுந்த புள்ளி மான் வறட்சியால் விலங்குகள் தவிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழையின்றி கண்மாய், ஊருணிகள் வறண்டு வருவதால் இரை தேடி வந்த புள்ளி மான் ஒன்று வழிதவறி நகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்குள் புகுந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் இணைந்து மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். ராமநாதபுரம், திருவாடானை, நயினார்கோவில், சாயல்குடி, கமுதி ஆகிய இடங்களில் காட்டுப்பகுதியில் ஏராளமான காட்டுப்பன்றிகள், புள்ளி மான்கள் வாழ்கின்றன. இவை தாகம் தீர்ப்பதற்காக ஊருணிகள், கண்மாய்களை நாடி வருகின்றன. குறிப்பாக மான்கள் நெடுஞ்சாலை பகுதிகளை நோக்கி வந்து செல்லும் போது வாகனங்களில் அடிபடுவதும், நாய்கள் துரத்தி கடித்து பலியாகின்றன. இவ்வாண்டு போதிய மழையின்றி பெரிய கண்மாய், எட்டிவயல், சக்கரகோட்டை கண்மாய்கள், ஊருணிகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிறிய புள்ளிமான் ஒன்று வழிதவறி ராமநாதபுரம் நகரில் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள புறநகர் போக்குவரத்து பணிமனைக்குள் புகுந்தது. தொழில் நுட்ப பணியாளர்களை பார்த்து பயந்து மரத்திற்குள் பதுங்கியது. தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் இணைந்து மானை பிடித்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். போதிய தண்ணீர் இல்லாததால் மான்கள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் வழிதவறி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. அவற்றை பாதுகாக்க விலங்குகள் அதிக நடமாட்டமுள்ள இடங்களை கண்டறிந்து தண்ணீர் தொட்டி வைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை