புகையிலை பொருட்கள் விற்பனையால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி
தொண்டி: தொண்டியில் தடை செய்யபட்ட புகையிலை, பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. புகையிலை, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்க தடை விதித்துள்ளது. எனினும் பள்ளி கல்லுாரி மாணவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மாணவர்களை குறிவைத்து இப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கல்லுாரியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் சோதனை செய்த போது மூன்று மாணவர்களின் பாக்கெட்டுகளில் நிறைய புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. எங்கு வாங்கினீர்கள் என ஆசிரியர்கள் கேட்டதற்கு தொண்டியில் வாங்கியதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மூன்று கடைகளுக்கு சீல் வைக்கபட்டது. தொண்டியில் உள்ள கடைகள், சுற்றியுள்ள கிராமபுறங்களில் உள்ள கடைகளில் அதிகம் விற்கின்றனர். போலீசாரும் தொடர்ந்து சோதனை நடத்தி கடைகளுக்கு அபராதம் விதித்தாலும் அதிக லாபம் கிடைப்பதால் சிலர் இத்தொழிலை விடுவதில்லை. அரசு தடை செய்யப்பட்ட புகையிலை தயார் செய்யும் நிறுவனங்களை மூட வேண்டும். அப்போதுதான் இவ்வாறான பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படும். இல்லையேல் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியதாகிவிடும் என மக்கள் வலியுறுத்தினர்.