பாதுகாப்பு இல்லங்களில் தங்கி படித்த மாணவர்கள் பொதுத்தேர்வில் சாதனை
ராமநாதபுரம் : தாய், தந்தையை இழந்த பாதுகாப்பு இல்லங்களில் தங்கி படித்து வரும் மாணவர்கள் அரசு பொது தேர்வில் நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் பெற்றோர்களில் யாரவது ஒருவரை இழந்தவர்கள், இருவரையும் இழந்தவர்கள், பெற்றோர்கள் இருந்தும் பாராமரிப்பு செய்ய முடியாத நிலையில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகால் மீட்கப்பட்டு அரசு, அரசு உதவி பெறும் பாதுகாப்பு இல்லங்களில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலகும் சிறார்கள் தொடர்ந்து கல்வி கற்பதை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 பாதுகாப்பு இல்லங்களில் தங்கி 21 பேர் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ராமநாதபுரம் அன்னை சத்யா இல்லத்தில் தங்கியுள்ளவர்களில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேர் பெற்றுள்ளனர்.பிளஸ் 2 தேர்வு எழுதிய 17 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது போன்று பெற்றோர்கள் இல்லாத நிலையில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.