நயினார்கோவிலில் கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம்
பரமக்குடி: பரமக்குடி அருகே நயினார்கோவில் வட்டாரத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.நடப்பு ஆண்டில் 1595 ஏக்கரில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு பணிக்கு ஏக்கர் ஒன்றுக்கு 800 ரூபாய் வீதம் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. மாவட்ட உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:நயினார்கோவில் பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் உளி கலப்பை அல்லது சட்டி கலப்பை மூலம் கோடை உழவு செய்து மேல்மண்ணை சிறுசிறு கட்டிகள் ஆக்கிவிட வேண்டும். இதனால் கோடை மழை நீர் வழிந்து ஓடாமல் நிறுத்தி வைக்கலாம்.மேலும் வெப்பம், குளிர்ச்சி இரண்டுமே மண்ணுக்கு கிடைக்கப்பெற்று மண்ணின் கட்டுமானம் பலமடையும். பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள் சூரிய ஒளியில் அழிக்கப்படும். களைகள் முளைப்பது தவிர்க்கப்படும். இதனால் களை மற்றும் பூச்சி தாக்குதல் குறையும் என்றார்.தொடர்ந்து நயினார்கோவில் பகுதியில் தாளையடிக்கோட்டை, ராதாப்புளி கிராமங்களில் உழவு செய்யப்பட்ட நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டன. கோடை உழவு செய்த விவசாயிகள் தங்கள் நிலத்தின் பட்டா மற்றும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வேளாண் விரிவாக்க அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என நயினார்கோவில் உதவி இயக்குனர் பானு பிரகாஷ் தெரிவித்தார்.