துணை மின் நிலையம் சீரமைப்பு பணி துவக்கம்
நயினார்கோவில்,: பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் பி.கொடிக்குளம் ரோட்டில் உள்ள துணை மின் நிலையம் செடி, கொடிகள் மற்றும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து இருந்தது. இதனால் காற்று, மழையின் போது மின் பாதிப்பு ஏற்படுவது குறித்து தினமலர் நாளிதழ் நேற்று சுட்டிக்காட்டியது.இந்நிலையில் துணை மின் நிலையத்தில் இருந்த புதர்களை அகற்றும் பணி நேற்று துவங்கி நடந்தது. தொடர்ந்து துணை மின் நிலையத்திலிருந்து உதயகுடி மின் பாதையில் புதிய உயர் அழுத்த மின் கம்பிகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் சிவகங்கை மின் பகிர்மானம் சாலை கிராமத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இப்பகுதியில் மின் கம்பிகள் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உதயகுடி, நகரம், நகரமங்கலம், தனியாபுளி, அரியான்கோட்டை, வாதவனேரி, கொடிக்குளம், மணக்குடி, ஆட்டாங்குடி, கொட்டகுடி, குயவனேந்தல், அகரம், பணிதவயல் ஆகிய பகுதிகளில் சாலை கிராமத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட உள்ளது.தொடர்ந்து சீரான தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என பரமக்குடி உதவி செயற்பொறியாளர் (ஊரகம்) செந்தில்குமார் தெரிவித்தார்.