கடலில் மூழ்கிய விசைப்படகு இரு நாட்களுக்கு பிறகு மீட்பு
திருவாடானை:விசைப்படகில் பலகை உடைந்ததால் தண்ணீர் புகுந்து தொண்டி கடலில் மூழ்கிய நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சோலியக்குடியை சேர்ந்தவர் விசாலாட்சி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் நம்புதாளை கருப்பையா 39, தளிர்மருங்கூர் தெற்குகுடியிருப்பு சேகர் 52, சோலியக்குடி லாஞ்சியடி ஞானசேகரன் 67, சம்பை சந்தியாகு 52, ஆகியோர் டிச.30 காலை 8:00 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் அடிப்பகுதியில் பலகை உடைந்தது. இதில் கடல் நீர் புகுந்ததால் படகு மூழ்கத் துவங்கியது. தத்தளித்த மீனவர்களை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சென்று காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். மூழ்கிய படகை மற்ற மீனவர்கள் நான்கு படகில் சென்று கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பலத்த காற்று வீசியதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இரு நாட்களாக தொடர்ந்து முயற்சி செய்து நேற்று காலை படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். படகு முற்றிலும் சேதமடைந்திருந்தது.