உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று முன் தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்., 5 பொங்கல் விழா நடக்கிறது.இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு 10:40 மணிக்கு கொடியேற்றப்பட்டதையடுத்து முத்து மாரியம்மனுக்கு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தன.இரவு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் மாநிலம் முழுதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பொங்கல் வைத்தும், அக்னி சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை எடுத்தும், கரும்பு தொட்டில் சுமந்தும், அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்தி செலுத்துவர்.பங்குனி மாதம் பிறந்தது முதல் ஏராளமான பக்தர்கள் தாயமங்கலம் முத்துமாரியம்மனை தினமும் தரிசனம் செய்து செல்கின்றனர்.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருவிழாவிற்கு ஏப்., 7 வரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, கமுதி, காளையார்கோவில், இளையான்குடி, அருப்புக்கோட்டையில் இருந்து சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகின்றன. விழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மன் சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம், பூத வாகனங்களில் திருவீதி உலா வருவார்.ஏப்., 6 இரவு அம்மன் மின்ரதத்தில் பவனி வருவார். ஏப்., 7 காலை 7:20 மணி முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்துவர். அன்று மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவமும், இரவு 10:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருள்வதும் நடக்கும். ஏப்., 8 இரவு 7:40 மணிக்கு தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறும்.பரம்பரை அறங்காவலர் எம்.வெங்கடேசன் தலைமையில் கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி