மூன்று மாதங்களாக முடங்கிய சூழலியல் சுற்றுலாத்தளம் செப். முதல் வாரத்தில் துவங்கும்
கீழக்கரை, : ஏர்வாடி ஊராட்சி பிச்சை மூப்பன்வலசையில் செயல்படும் சூழலில் சுற்றுலா தளம் 3 மாதங்களாக செயல்பாடின்றி முடங்கிய நிலையில் செப்., முதல் செயல்பட உள்ளது. ஜூன், ஜூலை, ஆக., ஆகிய மூன்று மாதங்களில் கடலின் சீற்றம் அதிகமாகவும், பேரலைகளின் தாக்கம் இருப்பதால் பிச்சை மூப்பன் வலசையில் இருந்து இரண்டு நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள மணல் திட்டுக்கு செல்லக்கூடிய சூழலியல் சுற்றுலா தளம் செயல்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பிச்சைமூப்பன் வலசையில் அமைந்திருக்க கூடிய மணல் திட்டிற்கு மோட்டார் பைபர் படகில் 12 பேர் வீதம் பயணித்து 50 நிமிடங்கள் சுற்றி வந்து மீண்டும் கடற்கரையை வந்தடைவார்கள். இதற்கு கட்டணமாக நபருக்கு ரூ.200 வீதம் வசூலிக்கப்படுகிறது. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் இயங்கக்கூடிய இந்த சூழலியல் சுற்றுலா தளத்தில் பலவகையான பவளப்பாறைகள், கலர் மீன்கள் மற்றும் இயற்கை சார்ந்த விஷயங்களை கண்டு களிப்பதற்கு ஏற்றவாறு கண்ணாடி இழையிலான படகுகள் மூலம் சுற்றி காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் ஆக., நிறைவுபெறும் வகையில் கடலுக்குள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆர்வம் மிகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கடற்கரை பகுதிக்கு வந்து அங்குள்ள பொழுது போக்கு பூங்காவை ரசித்து விட்டு மீண்டும் செல்கின்றனர். செப்., முதல் வாரத்தில் படகு போக்குவரத்து துவங்கும் என தெரிவிக்கப்பட்டதால் இது குறித்த விபரங்களை கேட்டு தெரிந்து செல்கின்றனர்.