மேலும் செய்திகள்
கடல் எல்லை போதவில்லை; மீனவர்கள் அவதி
12-Oct-2024
ராமநாதபுரம்:தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 1072 கி.மீ., நீளமான கடற்கரை உள்ளது. இங்கு 608 மீனவர் கிராமங்கள் உள்ளன. இந்தியாவில் மீன்பிடி தொழிலில் தமிழகம் மட்டும் 24 சதவீதம் பங்களிப்பை அளிக்கிறது. பல ஆயிரம் கோடி அந்நிய செலவாணியை ஈட்டித் தருகின்றனர். அதே நேரம் இங்குள்ள மீனவர்கள் மீன் பிடி தொழிலுக்கு செல்லும்நாட்கள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. பல்வேறு இடையூறு காரணமாக தொழிலில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்டில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் வருகிறது. வாரத்தில் ஞாயிறு தோறும் விடுமுறை நாள் என்பதால் 48 நாட்கள் தொழிலுக்கு செல்வதில்லை. மீன்பிடி படகுகள் அதிகம் இருப்பதால் வாரத்தில் மூன்று நாள் ஒரு படகுக்கும், அடுத்த பகுதி படக்கு 3 நாள் மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.இதில் வானிலை மோசமாக உள்ளதாக பாதி நாட்கள் மீன் பிடி தொழில் தடை செய்யப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு நுாறு நாள் கூட மீன் பிடி தொழில் செய்ய முடியவில்லை.இதையும் தாண்டி தொழிலுக்கு சென்றால் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக படகுகளை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இதனால் அச்சத்துடனே தொழில் செய்யும் நிலை உள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நிம்மதியாக மீன் பிடி தொழிலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
12-Oct-2024