30 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட ஒப்பிலான் மாரியூர் கூட்டு குடிநீர் திட்டம் ஒரு மாதமாக தண்ணீர் நிறுத்தம்
சாயல்குடி: கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வறட்சியின் தாக்கத்தால் பாதிப்பிற்குள்ளான கிராமங்களுக்கு உள்ளூரிலேயே கிணறுகள் தோண்டி அவற்றின் மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் திட்டம் துவக்கப்பட்டது.சாயல்குடி அருகே உள்ள ஒப்பிலான் -மாரியூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நான்கு ஊராட்சி கிராம மக்களும் அதனை சுற்றியுள்ள 20 குக்கிராமங்களும் பயனடைந்தன. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தெரு குழாய்கள், வீட்டு இணைப்புகளில் குடிநீர் சப்ளை இல்லாத நிலை தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.கிராம மக்கள் கூறியதாவது: ஒப்பிலான் - மாரியூர் கூட்டு குடிநீர் திட்டம் இப்பகுதி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவற்றை முறையாக நிர்வகித்து பராமரிக்க வேண்டிய பணியாளர்கள் மெத்தன போக்கை கையாண்டு வருகின்றனர். அதனால் ஒரு மாதமாக தண்ணீர் வரத்தின்றி உள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாகப் பொறியாளருக்கு வாலிநோக்கம், மாரியூர், ஒப்பிலான், பெரியகுளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து காசோலையாக மாதந்தோறும் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஊராட்சி கணக்கு எண் 2 மூலம் வழங்குகின்றனர்.இத்தொகையின் நிதியை கொண்டு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவினங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஒரு சில ஊராட்சிகளில் தண்ணீர் வராததற்கு நாங்கள் எதற்கு தொகை செலுத்த வேண்டும் எனக் கூறுகின்றனர்.இவ்விஷயத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மெத்தனப் போக்கை கையாண்டு வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் இலவசமாக வழங்கிய இரண்டரை ஏக்கர் நிலத்தில் நான்கு கிணறுகள் தோண்டப்பட்டு அவற்றிலிருந்து கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை நடக்கிறது.எனவே மாவட்ட நிர்வாகம் சுற்றுவட்டார கிராம பொதுமக்களின் நலன் கருதி முறையாக தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.