திருவாடானை கோயிலில் உப்பு நீரை நன்னீராக்கும் கருவி வீணாகியது
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உவர் நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படாமல் போனதால் கருவி துருப்பிடித்து வீணானது. திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. வைகாசி விசாகம், ஆடிப்பூரத் திருவிழா, பிரதோஷம், சிவராத்திரி விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இது தவிர முகூர்த்த நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்களுக்கு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கோயிலுக்குள் ரூ.8 லட்சம் செலவில் உவர் நீரை நன்னீராக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் துவக்கி வைக்கப்பட்ட நாளில் இருந்து செயல்படாமல் போனது. இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்ட நாள் முதல் செயல்படவில்லை. இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட கருவிகள் துருப்பிடித்து வீணாகிவிட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க தவறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இங்கு அன்னதான திட்டம் செயல்படுகிறது. கை கழுவ கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கோயில் முன்புள்ள தெப்பக்குளத்தில் இருந்து நீர் கொண்டு வந்து பயன்படுத்தப்படுகிறது என்றனர்.