சிறிய கண்மாய்களில் தண்ணீர் இல்லை பருவமழை பெய்தும் ஏமாற்றத்தில் விவசாயிகள்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போதிய பருவமழை இல்லாததால் 50க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களில் தண்ணீரின்றி காலியாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என்று திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்கள் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதியில் போதிய பருவமழை இல்லாததால் 50க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களில் 10 சதவீதம் தண்ணீர் கூட தற்போது இல்லாமல்பெரும்பாலான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன.தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெற்ற ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் ஒரு அடிக்கும்குறைவான தண்ணீரே உள்ளது. இந்நிலையில் பெரிய கண்மாயின் கீழ் உள்ள சித்துார்வாடி, வெட்டுக்குளம், கலங்காப்புளி, அழியாதான் மொழி, உப்பூர் உட்பட 50க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களில் தண்ணீர் இல்லை.கடந்த ஆண்டு இதே நாளில் பெரிய கண்மாய் உட்பட சிறிய கண்மாய்களிலும், 50 சதவீதத்திற்கும்மேல் தண்ணீர் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது கண்மாய்களில் போதிய தண்ணீர் இல்லாததால் பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.