லாந்தையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு டிரான்ஸ்பார்மர் வழியாக மின்விநியோகம்
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் அருகேயுள்ள லாந்தை ஊராட்சியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு உயரழுத்த தரைவழி மின் இணைப்பு மாற்றப்பட்டு, டிரான்ஸ்பார்மர், மின்கம்பம் வழியாக மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. லாந்தை ஊராட்சியில் கடந்த 1984ல் லாந்தை, கண்ணனை, பெரிய தாமரைக்குடி, சிறிய தாமரைக்குடி ஆகிய கிராமங்களுக்கு ரயில்வே தண்டவாளத்தில் கீழே தரைப்பகுதி வழியாக உயர் அழுத்த மின் விநியோகம் வழங்கப்பட்டது.தற்போது லாந்தை, அதைசுற்றியுள்ள கிராமங்களில் 6000பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் உயர் அழுத்த மின் பிரச்னையால் மக்கள் சிரமப்பட்டனர். பெருகிவரும் வீடுகளில் வசதிக்கேற்ப மின்விநியோகம் இன்றி அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.லாந்தை ஊராட்சி தலைவர் கவிதா கூறியதாவது: முன்பு ரயில் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் கேபிள் மூலமாக சென்ற மின்சாரம் துண்டிக்கப்பட்டு புத்தேந்தல் பகுதியில் இருந்து 3 கி.,மீ., தொலைவிற்கு 40க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் நடப்பட்டு 100 கே.வி., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.லாந்தை ஊராட்சி சுற்றுவட்டார கிராமங்களுக்கு தடையின்றி மின்விநியோகம் வழங்கப்படுகிறது.ஊராட்சி மற்றும் சொந்த நிதியை பயன்படுத்தி ரூ.12 லட்சத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்பில் இப்பணிகளை செய்ய முடிந்தது என்றார்.