கள்ளப்படகில் இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற வாலிபர் உள்ளிட்ட இருவர் கைது
ராமேஸ்வரம்:திருட்டு வழக்கில் தப்பிக்க தனுஷ்கோடியில் இருந்து கள்ளப்படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை வாலிபர் உள்ளிட்ட இருவரை கியூபிரிவு போலீசார் கைது செய்தனர்.தனுஷ்கோடி கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் விசாரித்தனர். இவர் இலங்கை மன்னார் பகுதி டினோசன் (எ)சூர்யா 25, எனத் தெரிந்தது. இவர் 2019ல் 'விசா'வில் விமான மூலம் சென்னை வந்து கோவை, ஈரோடு, சேலத்தில் கூலி வேலை செய்துள்ளார்.மேலும் அப்பகுதியில் திருட்டு, அடிதடியில் ஈடுபட்டதால் கோவை, ஈரோடு ஸ்டேஷன்களில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க தனுஷ்கோடியில் உள்ள ஏஜன்ட் மூலம் கள்ளப்படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல தனுஷ்கோடி வந்த போது போலீசாரிடம் சிக்கினார்.தனுஷ்கோடியில் உள்ள படகு ஏஜன்ட் ஜெய்கணேஷ் 50, என்பவரையும் போலீசார் பிடித்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தனுஷ்கோடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.