விஜய் இன்னும் நடிகராகவே உள்ளார்உயிர்பலிக்கு காரணம் ரசிகர் கூட்டம் ஜவாஹிருல்லா பேட்டி
ராமநாதபுரம்,: ''தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் 40 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்காமல் உடனே சென்னை புறப்பட்டது அவர் இன்னும் நடிகராகவே இருப்பதை காட்டுகிறது. அவரை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் பலர் ஒரே இடத்தில் கூடியது உயிரிழப்புக்கு காரணம்,'' என, ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கரூரில் த.வெ.க., பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியின் மாநாட்டிலும் இதுபோன்ற துயரம் நடந்ததில்லை. அரசியல் கட்சிகளின் கூட்டம் பெரும்பாலும் கட்டுக்கோப்புடன் நடக்கும். அங்கு வருபவர்கள் அனைவரும் அரசியல் மயமாக்கப்பட்டவர்கள். த.வெ.க., பிரசாரம் காண கரூர் வந்தவர்கள் பெரும்பாலும் விஜயை காண வந்த ரசிகர்களின் கூட்டம். கரூரில் கூடிய கூட்டத்தை தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த போலீசார் வந்திருந்தாலும் கட்டுப்படுத்தியிருக்க முடியாது. அதனால் போலீஸ் பாதுகாப்பை இதில் குறைகூற முடியாது. இந்த துயர சம்பவத்திற்கு பின் பலர் த.வெ.க., தலைவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சம்பவ இரவே கரூர் சென்றுள்ளார். ஆனால் கரூரில் பலர் உயிரிழந்த நிலையில் அதை கருத்தில் கொள்ளாமல் உடனே விஜய் சென்னை சென்றது அவர் இன்னும் நடிகராக இருப்பதை காட்டுகிறது என்றார்.