அரசு பள்ளிக்கு மேளதாளத்துடன் கல்விச்சீர் வழங்கிய கிராம மக்கள்
தொண்டி: நம்புதாளை அரசு தொடக்கப்பள்ளிக்கு மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று கிராம மக்கள் கல்விச்சீர் வழங்கினர். தொண்டி அருகே நம்புதாளை அரசு தொடக்கப்பள்ளியில் 320 மாணவர்கள் படிக்கின்றனர். ஸ்மார்ட் வகுப்பு கொண்ட பள்ளியாகவும் உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் கலைத்திருவிழாவில் நடந்த போட்டியில் மாவட்ட அளவில் சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதை கொண்டாடும் வகையில் மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் மூலம் கல்விச் சீர் வழங்கும் விழா நேற்று நடந்தது. மேள, தாளம் முழங்க திருவிழா ஊர்வலம் போன்று ஒரு கி.மீ., நடந்து வந்து கல்விச்சீர்களை கொடுத்தனர். அத்துடன் சரக்கு வாகனத்தில் மாணவர்களுக்கு தேவையான டிபன் பாக்ஸ், சேர், சிலேட், பேனா, விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தர்ஷினி, பள்ளி மேலாண்மை குழு தலைவி சுமையாபானு கலந்து கொண்டனர்.