கடம்பூர் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கடம்பூர் கிராம மக்கள் தங்கள் ஊர் கண்மாய்க்குரிய தண்ணீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ராமநாதபுரம் தொருவளூர் அருகே கடம்பூர் கிராம மக்கள் ஊர் தலைவர் தர்மராசு தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், கொடிக்குளம்கண்மாயில் இருந்து மழை நீர் வெளியேறி உபரி நீர் கடம்பூர் மற்றும் அகரம் கிராமத்திற்கு பிரிகிறது. இதில் கடம்பூர் கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை சிறுவயல் கிராம மக்கள் புதிதாக கால்வாய் அமைத்து தண்ணீரை கொண்டு சென்று விட்டனர். இதனால் கடம்பூர் கண்மாய்க்கு தண்ணீர் வரத்தின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் தண்ணீர் விடவில்லை. எனவே இருதரப்பு மக்களிடம் பேசி கடம்பூர் கண்மாய்க்கு தண்ணீர் வழங்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.