உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை நகராட்சியில் வார்டுகளில் குளறுபடியால் வாக்காளர்கள் பாதிப்பு : நிவர்த்தி செய்ய பா.ஜ., கோரிக்கை

கீழக்கரை நகராட்சியில் வார்டுகளில் குளறுபடியால் வாக்காளர்கள் பாதிப்பு : நிவர்த்தி செய்ய பா.ஜ., கோரிக்கை

கீழக்கரை: கீழக்கரை நகராட்சியில் வார்டுகளில் குளறுபடியால் வாக்காளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சரி செய்ய பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. கீழக்கரை நகராட்சியில் 1 முதல் 21 வார்டுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். 2022 நகராட்சி தேர்தலில் வார்டு குளறுபடியால் ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் ஓட்டுகள் பல வார்டுகளில் மாறி சென்றதால் ஓட்டுச் சாவடிக்கு செல்லக்கூடிய வாக்காளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இந்நிலையில் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு குளறுபடி ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நடப்பதால் அவற்றை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. கீழக்கரை பா.ஜ., நகர் தலைவர் ரகு, பொதுச் செயலாளர் ரமேஷ், கிளைத்தலைவர் விஜய துரை பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: பொதுவாக கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு வரையறையில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. ஆரம்பத்திலேயே அரசு அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அவற்றை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் காலங்களில் இது போன்ற பிரச்னைகள் பல இடங்களில் எதிரொலிக்கின்றன. வார்டில் உள்ள குறைகளை தெரிவிக்க சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களை தேடும் போது இது எனது வார்டு அல்ல. உங்களது வார்டை பாருங்கள் என ஒரே குடும்ப உறுப்பினர்களை சொல்லும் நிலை உள்ளதால் தொடர் அலைக்கழிப்பை சந்திக்கின்றனர். அந்தந்த குடும்ப உறுப்பினர்களின் ஓட்டுகளை சம்பந்தப்பட்ட பூத்துகளில் அமையுமாறு செய்ய வேண்டும். இது குறித்து கீழக்கரை நகராட்சியில் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. தேர்தல் நேரத்தில் இது குறிப்பிட்ட கட்சிகளுக்கு பெரும் சாதகமாகவே அமைகிறது. இதனால் மக்கள் பிரச்சனைக்கு விடிவு இல்லாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வார்டு வரையறை குளறுபடிகளை களையவும், முறையான திட்டமிடல் பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை