ரேஷன் கட்டடம் திறப்பு விழாவிற்காக காத்திருப்பு
உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கையில் வராகி அம்மன் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். உத்தரகோசமங்கையில் வராகி அம்மன் கோயில் அருகே சேதமடைந்த கலையரங்கில் ரேஷன் கடை கட்டடம் இயங்கி வருகிறது. ஏற்கனவே ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்திருந்ததால் அங்குள்ள கலையரங்கில் அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்களை வைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். மழைக்காலங்களில் பொருட்களை பாதுகாப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. உத்தரகோசமங்கையில் 350 க்கும் அதிகமான கார்டுதாரர்கள் உள்ளனர். இந்நிலையில் ரேஷன் கடை கட்டடம் அவசியம் குறித்து கடந்த ஆண்டு தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன்காரணமாக ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டு நான்கு மாதங்களாக திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. எம்.எல்.ஏ., நிதியின் மூலம் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே ரேஷன் கடை கட்டடத்தை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.