பலத்த பாதுகாப்புடன் நடந்த வாரச்சந்தை ஏலம்
முதுகுளத்துார்:முதுகுளத்துார் பேரூராட்சி வாரச்சந்தை ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை ஏலம் கடந்த சில மாதத்திற்கு முன்பு பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது இரு தரப்பினர்களிடையே பிரச்னை ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை ஏலம் நடந்தது.செயல்அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.அப்போது வைப்புத் தொகையாக ரூ.20 லட்சத்திற்கு நேரடியாக 12 பேர் காசோலை எடுத்து இருந்தனர். ஆன்லைனில் ஒருவர் என 13 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலமானது ரூ.20 லட்சத்தில் துவங்கி முடிவில் காடமங்கலத்தை சேர்ந்த முருகேசன் ரூ.33 லட்சத்திற்கு வாரச்சந்தை ஏலம் எடுத்தார். இதற்கான ஆணையை பேரூராட்சி அதிகாரிகள் வழங்கினர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க டி.எஸ்.பி., சண்முகம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.