10 லட்சம் துாய்மை பணியாளர்களை நலவாரியத்தில் சேர்க்க நடவடிக்கை நலவாரியத் தலைவர் தகவல்
ராமநாதபுரம் : தமிழகத்தில் துாய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் 10 லட்சம் பேரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நலவாரிய தலைவர் வெ.ஆறுச்சாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கத்தில் தாட்கோ, ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற துாய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் வெ.ஆறுச்சாமி கூறியதாவது: துாய்மைப் பணியாளர்கள் நலவாரிய அட்டைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மாவட்டந்தோறும் குறைகளை கேட்கிறோம். பெண் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தடையின்றி உள்ளாட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்படும். அவ்வாறு உபகரணங்கள் மற்றும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்காத உள்ளாட்சி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்துள்ளார். ராமநாதபுரத்திற்கு செப்டிக் டாங்க் கழிவுகளை அகற்றும் வகையில் 5 ரோபோட் கருவிகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். வாரத்தில் ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க முதல்வர் ஸ்டாலின் இடம் வலியுறுத்தியுள்ளோம். வாரியத்தில் 10 லட்சம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். தற்போது 3 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றார்.ரூ.45,500 மதிப்பில் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாட்கோ மேலாளர் விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் செல்வி , ஊராட்சிகள் உதவி இயக்குநர் பத்மநாபன், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.