ரோட்டில் நிறுத்தப்படும் மாணவர்களின் சைக்கிள்கள் பாதுகாக்க என்ன நடவடிக்கை
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் எஸ்.என்.வி., அரசு பள்ளி முன்பு ரோட்டில் நிறுத்தப்படும் மாணவர்களின் சைக்கிள்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எமனேஸ்வரம் ஜீவா நகரில் எஸ்.என்.வி., அரசு மாதிரி பள்ளி செயல்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் காம்பவுண்ட் சுவர் ஆங்காங்கே திடீரென இடிந்து விழுகின்றன. இந்நிலையில் மாணவர்கள் சைக்கிள்களை நிறுத்துவதற்கு பள்ளி உள்பகுதியில் இடம் ஒதுக்கப்படாமல் இருக்கிறது. இதனால் பல நுாறு மாணவர்கள் நயினார்கோவில் ரோட்டின் எதிர்புறம் உள்ள மர நிழல்கள் மற்றும் தெருக்களில் நிறுத்திச் செல்லும் நிலை உள்ளது. இதனால் மழை, வெயிலில் சைக்கிள்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. மேலும் சைக்கிள்கள் திருடு போகும் அபாயம் உள்ளது. கிராமப்புற ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில் சைக்கிள்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே மாதிரி பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தி மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சைக்கிள்களுக்கு இடம் ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.