கீழக்கரையில் வாறுகால் கட்டும் பணியை எப்ப சார் முடிப்பீங்க பஸ் நிறுத்தத்தால் பயணிகள் அவதி
கீழக்கரை : கீழக்கரை நகராட்சி பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வராமல் ஒரு மாதமாக முக்கு ரோடு பகுதியிலேயே பயணிகளை இறக்கி விடும் நிகழ்வு தொடர்ந்து நடக்கிறது. கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து நகராட்சி பஸ் ஸ்டாண்ட் செல்லும் கிழக்கு பகுதியில் 300 மீ.,க்கு வாறுகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. செப்., 5 முதல் துவங்கிய இப்பணி தற்போது வரை ஆமை வேகத்தில் நடந்து வருவதால் கீழக்கரை பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செப்., 10 முதல் நிறுத்தப்பட்டு முக்கு ரோடு பகுதியிலேயே பயணிகளை இறக்கி விடுகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: க ழிவு நீர் மற்றும் மழைக்காலங்களில் ஓடக்கூடிய நீரை முறைப்படுத்துவதற்காக 300 மீ., நீளத்திற்கு வாறுகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக ஆமை வேகத்தில் நடப்பதால் பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்வரத்தின்றி வெறிச்சோடியது. பயணிகள் ஆட்டோவிற்கு ரூ.100 முதல் 60 வரை கொடுத்து கீழக்கரை முக்கு ரோட்டிற்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர். வாறுகால் பணியை விரைவில் முடித்து நகராட்சி பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் வந்து செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் துவங்கி விட்டால் அப்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து குளம் போல் தேங்கி விடும். எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் ஒப்பந்ததாரருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.