எமனேஸ்வரம் நயினார்கோவில் கால்வாய் எங்கே போனது
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதியில் இருந்து நயினார்கோவில் ஒன்றியத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் குப்பை மற்றும் தேவையற்ற செடி, மரங்களால் அடைபட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பார்த்திபனுார் வைகை பகுதியில் 1975ல் மதகணை கட்டப்பட்டது. இதன்படி ஆற்றில் மதகு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நேரடியாக ராமநாதபுரம் பெரிய கண்மாயை சென்றடையும் வகையில் உள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் பிரித்து விடும் நோக்கில் வலது, இடது பிரதான கால்வாய்கள் மற்றும் முதுகுளத்துார் பகுதிக்கு பரளை கால்வாய் உள்ளது. தொடர்ந்து 50 ஆண்டுகளை தொட்டுள்ள நிலையில் அவ்வப்போது கால்வாய், கண்மாய்கள் என பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இப்பணிகள் ரோட்டோரம் அதிகாரிகள் மற்றும் மக்கள் பார்வையில் படும் இடங்களில் மட்டுமே அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து உள்பகுதியில் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் செடி, கொடிகள், மரங்கள் வளர்ந்துள்ளதுடன், குப்பை கொட்டி மறைக்கப்பட்டு வருகிறது.இதனால் 1000 கன அடி என்ற கணக்கில் தண்ணீர் செல்லும் சூழலில் தண்ணீர் கடந்து செல்ல முடியாமல் கால்வாய் கரைகள் உடைகிறது. மேலும் அருகில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுகிறது. இதேபோல் எமனேஸ்வரம் பகுதிக்கு உட்பட்ட கால்வாய் பகுதியில் குப்பை கொட்டி அடைக்கப்படுவதுடன், மரங்கள் வளர்ந்து தடம் மறைந்துள்ளது. ஆகவே பொதுப்பணித்துறையினர் பார்த்திபனுார் மதகு அணை தொடங்கி ஒட்டுமொத்தமாக கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர்.