முதுகுளத்துார் பகுதியில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே விளக்கனேந்தல் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விதைகள் விதைத்து விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது பெய்த மழையால் பயிர்கள் முளைக்க துவங்கியுள்ளது. முதுகுளத்துார் அருகே விளக்கனேந்தல், மூலக்கரைப்பட்டி, கண்ணாத்தான், மணலுார், கீழக்குளம், ஆனைசேரி, நல்லாங்குளம், பெருங்கருணை, கே.ஆர்.பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்கின்றனர். இரவு நேரத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்து விவசாயப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சில மாதத்திற்கு முன்பு சிறுதானியப் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளன. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் கூறினர்.